வாஜிமா: புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று, 7.5 என்ற ரிக்டர் அளவிலான அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானின் இஷிகவா பகுதியில் பதிவானது. குறிப்பாக, ஜப்பானின் மேற்கு பகுதியில் இதன் தாக்கம் பெருமளவு உணரப்பட்டன. அதிலும், இஷிகவாவின் நோட்டோ பெனின்சுலா பகுதியில் மாலை 4.10 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் (6 மைல்) நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த நாடுகளின் புவியியல் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டனர். அது மட்டுமல்லாமல், சுனாமி எச்சரிக்கையும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தால் அதிகாரப்பூர்வமாக விடுக்கப்பட்டது. இதன் விளைவாக, இஷிகவாவின் பல நகரங்கள் சுனாமியை உணர்ந்தன. இதன்படி, வாஜிமாவில் 120 சென்டி மீட்டருக்கும் மேலான அலைகள் எழுந்தது. மேலும், கனாஜவா நகரத்தில் 90 சென்டி மீட்டர் அளவில் சுனாமி அலை உயர்ந்தது.
தொடர்ந்து, பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக அறியப்படும் வாஜிமா நகரத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடிந்தன. இந்த கட்டட இடிபாடுகளில் 50 பேர் வரை சிக்கியிருப்பார்கள் என அந்நாட்டு தீயணைப்புத்துறை தெரிவிக்கிறது. மேலும், நிகாட்டா மற்றும் டோயாமா நகரத்திலும் ஏற்பட்ட கட்டட சேதங்களில் 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், ஜப்பானில் ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட சேதங்களில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயங்கள் உடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, இன்னும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருக்கும் என்பதால், மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம், நேற்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வகையான சுனாமி எச்சரிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜப்பானை தாக்கியது சுனாமி - அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதி