லண்டன்:உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவருரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஊழியர்கள் பணிநீக்கம், ப்ளூ டிக்கிற்கு கட்டணம் உள்ளிட்டப் பல நடவடிக்கைகளை எடுத்தார். அதேபோல், ட்விட்டர் பயனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தார். அதில் உச்சகட்டமாக அண்மையில் ட்விட்டர் பதிவுகளை படிப்பதற்கும் கட்டுப்பாடு விதித்தார்.
அதன்படி, சந்தா செலுத்திய அதிகாரப்பூர்வ பயனாளர்கள் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பதிவுகளையும், சந்தா செலுத்தாமல் நீண்ட நாட்களாக டிவிட்டரை பயன்படுத்துவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவித்தார். சந்தா செலுத்தாமல், புதிதாக ட்விட்டர் கணக்கு தொடங்குபவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு உலகளவில் உள்ள ட்விட்டர் பயனர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ட்விட்டர் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது முதலே ட்விட்டர் பயனர்களும் தங்களது அதிருப்தியைத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த சூழலைப் பயன்படுத்தி பல நிறுவனங்களும் ட்விட்டருக்கு மாற்றாக ஒரு சமூக வலைதளத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டன.
அதில், குறிப்பாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ட்விட்டருக்குப் போட்டியாக ஒரு வலைதளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. அதனை மார்க் ஜூக்கர்பெர்க்கும் அண்மையில் உறுதி செய்தார். இன்ஸ்டாகிராமை மையமாகக் கொண்டு இயங்கும் "த்ரெட்ஸ்" (Threads) என்ற தளத்தை உருவாக்கி இருப்பதாகவும், அது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவித்தார்.