தாலின், எஸ்தோனியா:ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை அமைப்பின் தலைவர் எவ்ஜின் பிரிகோஜின் விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 23) மாஸ்கோவிற்கு வடக்கே நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. விமான வழித்தடம் குறித்து ஆய்வு செய்த AP (Associated Press) செய்தி நிறுவனம் அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் சிக்னல் திடீரென துண்டிக்கப்பட்டதை காண்பித்துள்ளது. வாக்னர் சார்பு டெலிகிராம் சேனலான கிரே சோன் இந்நிகழ்வு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், புகை நிறைந்த மேகத்தில் இருந்து ஒரு கல் விழுவது போல விமானம் விழும் காட்சி பதிவாகியுள்ளது. என்ஜின் இயக்கத்தை நிறுத்திவிட்டு விமானம் கீழே விழுவது ஃப்ரீஃபால் என அழைக்கப்படும். கடுமையான சேதம் ஏற்பட்டால் மட்டுமே இத்தகைய விபத்திற்கு சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் புலனாய்வு குழு விமான பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விசாரணையை துவக்கியுள்ளது.
இன்று அதிகாலையில் விபத்து நடந்த பகுதியில் 10 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், இத்துடன் தேடுதல் நடவடிக்கை முடிவடைந்ததாகவும் ரஷ்யா புலனாய்வு குழு அறிவித்துள்ளது. இந்த விமான விபத்து உண்மையாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா? என்ற பலரது மனதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அறிவித்தது. சிறிய நாடான உக்ரைனை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற ரஷ்யாவின் எண்ணம் விரைவில் பொய்த்துப் போகும் வகையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொடுத்த படை பலத்தின் உதவியுடன் உக்ரைன் ஈடுகொடுத்து போர் செய்தது. இதனால் ரஷ்ய ராணுவம் பலத்த சேதத்தை காண வேண்டிய நிலை உருவானது. போரில் ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாக அந்நாட்டின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு களமிறங்கியது.
வாக்னர் குழு உதவியுடன் உக்ரைன் தலைநகர் கீவ் சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில், ரஷ்யா தங்களுக்கு சரியாக ராணுவ உதவிகளை வழங்கவில்லை என்றும், தங்கள் வீரர்கள் மீதே தாக்குதல் நடத்தியதாகவும் கூறி வாக்னர் குழு ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியது. மேலும் மாஸ்கோவில் உள்ள ராணுவ ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டு உள்ளதாக கூறி படை திரட்டி முன்னோக்கி நகரத் தொடங்கியது. இதனால் ரஷ்யாவில் பாதுகாப்பு அவசரநிலை ஏற்பட்டது.
வாக்னர் குழு ரஷ்யாவின் ராணுவத் தலைமையகமாக கருதப்படும் ரோஸ்டோவை கைப்பற்றியதாக அறிவித்த நிலையில் மாஸ்கோ ராணுவத் தலைமையை கைப்பற்றப் போவதாகவும், ராணுவத் தலைமையை மாற்றப் போவதாகவும் அறிவித்தது. இதனால் நாட்டின் ராணுவ உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், உள்நாட்டு கிளர்ச்சியை தூண்டும் அனைவரும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றுன் அதிபர் புதின் அறிவித்தார்.