ஆண்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏறத்தாழ 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பித்து கரீபியன் தீவு நாடான ஆண்டிகுவா மற்றும் பார்படாஸ் நாட்டில் தஞ்சமடைந்தார்.
அவரை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இதனிடையே, ஆண்டிகுவா நாட்டில் லஞ்சம் கொடுத்து தனக்கான பாதுகாப்பை பெற்றுக் கொண்டதாகவும், நாடு கடத்தலில் இருந்து மெகுல் சோக்சி விலக்கு கோரியதாக தகவல் வெளியானது. இந்தியாவை விட்டு வெளியேறிய மெகுல் சோக்சி கியூபா செல்ல திட்டமிட்டதாக கூறப்பட்டது.
இந்தியா - கியூபா இடையே நாடு கடத்தப்படும் ஒப்பந்தம் இல்லாத நிலையில், அங்கு தப்பிச் செல்ல மெகுல் சோக்சி முயன்றதாகவும் பின்னர் பல்வேறு காரணங்களால் டொமினிகா தீவுகளுக்கு சென்றதாகவும் கூறப்பட்டது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று டொமினிகா தீவுகள் அரசு மெகுல் சோக்சியை நாடு கடத்த உத்தரவிட்டது.
இருப்பினும் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் நீதித்துறை, அரசு அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து மெகுல் ஜோக்சி தப்பித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே டொமினிக் தீவுகள் போலீசார் தன்னை நாடு கடத்த முயன்றதாகவும், அதற்கு தனது காதலியாக நடித்த பெண்ணும் உடந்தையாக இருந்ததாகவும் கூறி மெகுல் சோக்சி தரப்பில் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தன்னை அண்டிகுவா நாட்டை விட்டு வெளியேற்ற அனுமதிக்கக் கூடாது என மெகுல் சோக்சி தரப்பில் வாதிடப்பட்டது. ஆண்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மெகுல் ஜோக்சியை நாடு கடத்துவது தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வலுக்கட்டாயமாக மெகுல் சோக்சியை நாட்டில் இருந்து வெளியேற்ற முடியாது என்று கூறினர்.
மேலும் மெகுல் சோக்சி நாடு கடத்தல் விவகாரத்தில் அண்டிகுவா மற்றும் பார்புடா உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என நீதிபதிகள் கூறினர். இந்த தீர்ப்பால் மெகுல் சோக்சியை நாடு கடத்தும் மத்திய அரசின் முயற்சியில் சிறு தடங்கல் ஏற்பட்டு உள்ளது. முன்னதாக பிரபல நிதிக் குற்ற ஆய்வாளர் கென்னத் ரிஜோக், லஞ்சம் கொடுத்து மெகுல் சோக்சி தனது நாடு கடத்தலை தவிர்த்து வருவதாக கூறி கட்டுரை வெளியிட்டார்.
அந்த கட்டுரையில் ஆண்டிகுவா அரசின் போலீசார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாகவும், அந்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரி அடோனிஸ் ஹென்றி உதவி உடன் நீதிமன்ற நடவடிக்கைகளை தனக்கு சாதகமாக மெகுல் சோக்சி பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக மெகுல் சோக்சி ஒரு நாளைக்கு மூன்று முறையாவது அரசு அலுவலர்களை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதாக கூறப்பட்டது. குறிப்பாக ஆண்டிகுவா நீதிபதிகளும் அவருக்கு சாதகமான சூழலை உருவாக்கி வருவதாக அந்த கட்டுரையில் கென்னத் ரிஜோக் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க :ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு தாக்குதல் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!