டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் இழிவான கருத்துகளை வெளியிட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியான கருத்துக்கள் தனிப்பட்டவை என்றும், அவை அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என கூறி அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2ஆம் தேதி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். பின்னர், லட்சத்தீவு பயணம் குறித்து அவர், “லட்சத்தீவுகள் வெறும் தீவுகளின் கூட்டமல்ல அது காலம் காலமாக நீடித்து இருக்கும் அம்மக்களின் பாரம்பரியம் என்றும், நீங்கள் சுவாரசியமிக்க மற்றும் நல்லதொரு பயண அனுபவத்தைப் பெறவிரும்புபவார்கள் ஆனால், அப்போது உங்கள் பயணப்பட்டியலில் லட்சத்தீவும் இடம்பெற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பதிவிட்டிருந்த இந்த செய்திக்கு மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் வெறுப்பு கருத்துகளை பதிவிட்டனர். அவர்களின், இந்த கருத்துக்கள் குறித்து மாலத்தீவு எதிர்க்கட்சிகளிடையே கண்டனங்கள் வலுத்தன. மேலும், அமைச்சர்களின் இழிவான கருத்துக்கள் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் மாலத்தீவுகளுக்கு செல்வதற்குப் பதிலாக உள்நாட்டு சுற்றுலாத் தலங்களுக்கு செல்லுமாறு தங்களின் X தளத்தில் மக்களை வலியுறுத்தி இருந்தனர்.
இதன் எதிரொலியாக, சில இந்தியர்கள் மாலத்தீவுக்கு செல்ல திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்வதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் இருந்தன. இதனிடையே, அமைச்சர்களின் இத்தகைய வெறுப்பு கருத்துகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய அமைச்சகம் மாலத்தீவு தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தது.