பிரான்ஸ்: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று(ஜூலை 13) பாரிஸ் விமான நிலையம் சென்று இறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பாரிஸ் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அதேபோல், பாரிஸ் விமான நிலையத்தில் ஏராளமான இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து பாரிஸில் பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார். இதையடுத்து, பிரான்ஸ் செனட் கட்டடத்தில் அந்நாட்டின் செனட் தலைவர் ஜெரார்ட் லார்ச்சரை சந்தித்துப் பேசினார். பின்னர், பிரதமர் எலிசபெத் போர்ன் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஆற்றல், பொருளாதாரம், கல்வி, கலாசாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்டப் பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினர். அதன் பிறகு, நேற்று இரவு அதிபர் மாளிகையான எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்து அளித்தார்.