ஷார்ம் எல் ஷேக்:ஐநா பருவநிலை மாநாடு (UNFCCC - COP 27) எகிப்தின் ஷார்ம் எல் ஷேக்கில் நவம்பர் 6ஆம் தேதி தொடங்கியது. நவம்பர் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமை வகித்துவருகிறார். இன்று (நவம்பர் 8) சதுப்புநில பாதுகாப்பு கூட்டமைப்பை தொடங்கிவைத்தார். அதன்பின் சதுப்புநிலக்காடுகள் குறித்து விளக்கினார். அப்போது அவர், "சதுப்புநிலங்களின் உலகளாவிய பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்ல, உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைந்துள்ளன. சதுப்புநிலங்கள் உலகின் மிக முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். இந்த காடுகள் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு நாற்றங்கால் நிலமாக செயல்படுகிறது. கடலோர அரிப்பைப் பாதுகாக்கிறது. அதிகளவில் கார்பனைப் பிரித்தெடுக்கிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.
சதுப்புநிலங்கள் உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளிலும், 123 நாடுகளிலும் காணப்படுகின்றன. சதுப்புநிலங்கள் பல வெப்பமண்டல கடலோரப் பகுதிகளின் பொருளாதார அடித்தளமாகும். நீலப் பொருளாதாரத்தைத் தக்கவைக்க, கடலோர வாழ்விடங்கள், குறிப்பாக வெப்பமண்டல நாடுகளுக்கான சதுப்புநிலங்கள், உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஸ்திரதன்மையை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும். எதிர்கால கடல் மட்ட உயர்வு, சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை பேரழிவுகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்த சதுப்பு நிலங்கள் முக்கியமான மற்றும் சிறந்த வழியாகும். வரும் 2030ஆம் ஆண்டிற்குள் கூடுதலான காடுகள் மற்றும் மரங்கள் மூலம் 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் கரியமில வாயுக்களை நீக்க இந்தியா உறுதியளித்துள்ளது.