மாலே : மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பொதுவாகவே இந்திய எதிர்ப்பு அரசியல் கொள்கைகளை கொண்டவராகவே காணப்படுகிறார். தீவு நாடான மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்றுவது, இந்தியாவுக்கு முதலிடம் என்கிற கொள்கையை மாற்றுவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியே முகமது முய்சு அதிபராக வெற்றி பெற்றார்.
தொடர்ந்து சீனாவுடனான நட்புறவை பலப்படுத்திய முகமது முய்சு, அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். சீன ஆதரவு, இந்திய எதிர்ப்பு அரசியல் மாலத்தீவில் புகைத்துக் கொண்டே இருந்தாலும், அண்மையில் பிரதமர் மோடியின் லசத்தீவு பயணம் அதை மேலும் கிண்டி கிளறி பூதாகரமாக்கியது.
அண்மையில் இரண்டு நாள் பயணமாக லட்சத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு தனது அனுபவங்கள் குறித்தும், இந்தியர்கள் லட்சத்தீவு வர வேண்டும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் கடுமையான வார்த்தைகள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டனர்.
இந்த கருத்து சர்ச்சையான நிலையில், மாலத்தீவு அரசுக்கு எதிராக இந்தியர்கள் கொதித்து எழத் தொடங்கினர். இதையடுத்து, சர்ச்சை கருத்து தெரிவித்த அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோரை இடைநீக்கம் செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்தது.
மேலும், 3 அமைச்சர்களின் கருத்து தனிப்பட்ட கருத்துகள் என்றும் அது அரசு சார்ந்தது இல்லை என்றும் மாலத்தீவு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மாலத்தீவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்திய மக்கள், அங்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்த அனைத்தையும் ரத்து செய்தனர்.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக இந்திய சுற்றுலா நிறுவனங்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா புக்கிங்களை தற்காலிகமாக நிறுத்தியது. அதேநேரம் சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாலத்தீவு அதிபர், அந்நாட்டு அரசுடன் 21 ஒப்பந்தைகளை கையெழுத்திட்டார். தொடர்ந்து மாலத்தீவு அதிகளவிலான சீனர்கள் சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதிபர் முய்சு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட மாலத்தீவு திரும்பிய அதிபர் முகமது முய்சு, தாங்கள் சிறிய நாடாக இருக்கலாம் என்றும் அதற்காக தங்களை ஆளும் உரிமையை வழங்கிவிட முடியாது என்று மறைமுகமாக இந்தியாவை சாடினார். இந்நிலையில், தான் மாலத்தீவு தலைநகர் மாலேவில் மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் தற்போதைய அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், இந்திய ஆதரவு நிலைப்பாடு கொண்ட மாலத்தீவு ஜனநாயக கட்சிக்கும், இடையே நேரடியாக மோதல் நிலவியது. கடும் போக்குக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இந்திய ஆதரவு மாலத்தீவு ஜனநாயக கட்சி, மாலே மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
41 வாக்கு பெட்டிகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் இந்திய ஆதரவு மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆடம் அசிம், ஏறத்தாழ 5 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிபர் முகமது முய்சுவின் வேட்பாளர் அய்ஷாத் அசிமா ஷாக்கூர் 3 ஆயிரத்து 301 வாக்குகள் மட்டும் பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக மாலே மேயராக முகமது முய்சு பதவி வகித்து வந்த நிலையில், அதிபர் தேர்தலை முன்னிட்டு மேயர் பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டு வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தனது சொந்த தொகுதியில் முகமது முய்சுவின் வேட்பாளர் தோல்வியை தழுவி இருப்பது, நாட்டில் தனக்கான ஆதரவு குறைந்து வருவதையும் இந்திய எதிர்ப்பு கொள்கை தவறான முடிவு என்பதை முய்சு புரிந்து கொண்டு இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க :அயோத்தி ராமர் கோயில் திறப்பு - அமெரிக்காவில் ராட்சத பில்போர்டுகள் மூலம் விளம்பரம்!