கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த அக்டோபர் 10-ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட முடியாத நிலை உள்ளது.
பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கூபின் ஆளும் பாரிசான் கூட்டணியும், முன்னாள் பிரதமர் முஹ்யிதீன் யாசின் தலைமையிலான மற்றொரு அணியும் மற்ற முன்னணி போட்டியாளர்களாக உள்ளன. தெளிவான வெற்றியாளர் இல்லாமல், மலேசியா பொருளாதார வளர்ச்சி குறைவதையும் பணவீக்கத்தை அதிகரிப்பதையும் எதிர்கொள்வதால் அரசியல் நிச்சயமற்ற நிலை நீடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
பினாங்கு மாநிலத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் இப்ராஹிம் கூறுகையில், "இப்போதைய நிலை நன்றாக இருப்பதாக நான் நினைக்கிறேன், நாங்கள் எச்சரிக்கையுடனும், நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்றார்.