இலங்கை:இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்த அசாதாரண சூழலுக்குப் பொறுப்பேற்று, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதாரத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இலங்கையில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஐந்து நாள்களுக்குப் பிறகு அவசர நிலை ரத்து செய்யப்பட்டது.
ஆனால், அதிபர் மற்றும் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி மக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள், மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.