உலகமே காதலால் இயங்குகிறது. உலகம் முழுதும் பரவும் கதைகளில் காதல் கதைகளுக்கே முன்னுரிமை. திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களே நீங்கா இடத்தைப் பிடிக்கின்றன. இவ்வாறு 1997இல் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள காதலர்களுக்கு உத்வேகத்தை கொடுத்த கற்பனைக் காதல் காவியம்தான் ‘டைட்டானிக்’ என்ற ஹாலிவுட் திரைப்படம். இப்படத்தின் மூலம் ஜாக் என்ற அழகிய இளைஞனாக அறிமுகமாகி ரசிகர்களின் இதயத்தை களவாடிய லியனார்டோ டிகாப்ரியோ தனது 48ஆவது பிறந்த தினத்தை இன்று (நவ-11) கொண்டாடுகிறார்.
உலக அரங்கில் அறியப்பட்ட முகமாகவும், அனைவராலும் விரும்பப்பட்ட முகமாகவும் இருந்த லியனார்டோவின் திரைப் பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. இந்த அங்கீகாரமும் விரைவில் கிடைக்கவில்லை. ஹாலிவுட் படங்கள் என்றாலே சண்டை, ஆக்ஷன் என இந்திய ரசிகர்களின் எண்ணம் இருந்த வேளையில், மூன்று மணி நேரம் அழகான காதல் கதையைக்கூறி உலகம் முழுவதுமான ரசிகர்களை அள்ளியது டைட்டானிக் திரைப்படம். டைட்டானிக் மூலம் உலக ரசிகர்களுக்கு அறிமுகமான டிகாப்ரியோ வாழ்வு முழுதும் பல தடைகளைக் கடந்து முன்னேறி வருகிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் 1974ஆம் ஆண்டு நவம்பர் 11அன்று லியனார்டோ பிறந்தார். இவரது முழுப்பெயர் லியனார்டோ வில்ஹம் டிகாப்ரியோ என்பதாகும். சிறு வயதிலேயே தொலைக்காட்சி தொடர்களில் நடித்த டிகாப்ரியோ தொடர்ந்து பல படங்களில் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்தார். 1993இல் நடித்த What's Eating Gilbert Grape படத்திற்காக ஆஸ்காருக்காக முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டார். 1996இல் ரோமியோ ஜூலியட், 1997இல் டைடானிக் என காதல் கதைகளில் நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அறியப்பட்டார்.
டைட்டானிக்கில் சிக்காத ஆஸ்கார்: டைட்டானிக் படம் ஆஸ்கார் விருதுக்காக பல துறைகளில் பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகள் வாங்கியது. இருப்பினும் டிகாப்ரியோவிற்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை. இதனை அன்றைய ஊடகங்கள் டிகாப்ரியோவைத் தவிர, மற்றவர்களுக்கு ஆஸ்கார் என வசைபாடின. இதனையடுத்து ஆஸ்கார் விருதுக்காக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.