இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (அக்டோபர் 23) அரசியலமைப்பின் 20ஆவது சட்டத் திருத்தம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய சி.வி.விக்னேஸ்வரன், "ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும் இந்த ஆட்சி நகர்கிறது. பெரும்பான்மையான மக்களிடம், சிறுபான்மையினரை பயங்கரவாதிகளைப் போல சித்தரிப்பதால் வாக்குகளைப் பெறலாம். ஆனால், ஒருபோதும் நாட்டை முன்னேற்ற முடியாது.
அத்தகைய இனவாதத்தை விதைத்து தனிமனிதர் ஒருவரிடம் அதிகாரத்தை குவிக்கும் எண்ணத்திலேயே இந்த 20ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது. இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்டத் திருத்தம், உங்களுக்கும், உங்களது எதிர்கால சந்ததியினருக்கும் தீங்கை ஏற்படுத்தும்.
யார் யாரெல்லாம் இந்த 20ஆவது சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு பாடுபட்டார்களோ, யார் யாரெல்லாம் இதற்கு ஆதரவு அளித்தார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இந்த சட்டத் திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பதை கூறிக்கொள்கிறேன்.