அண்மையில், வியட்நாம் மற்றும் ஜப்பான் அரசுகளுக்கிடையே பாதுகாப்பு துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
அப்போது ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா, "தென் சீன கடலில் அமைந்துள்ள வியட்நாமில் அமைதியை நிலைநாட்டி, வளர்ச்சியை உறுதிசெய்திட ஜப்பான் அரசு உதவ தயார்" என வியட்நாம் பிரதமருக்கு உறுதியளித்திருந்தார்.
இது தொடர்பாக இன்று (அக்டோபர் 20) வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய வியட்நாம் பிரதமர் நியான் ஸூவான் ஃபுக், "சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் (எஸ்சிஎஸ்) உள்ளிட்ட பிராந்திய பிரச்னைகளில் நிரந்தர தீர்வை அமைதியான வழியில் அடைந்திட ஜப்பான் அரசு உறுதுணையாக இருக்குமென அந்நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா உறுதியளித்திருப்பதற்கு நன்றி. வியட்நாமுடன் ஜப்பான் அரசு செய்துள்ள ஒப்பந்தமானது, நாட்டின் பாதுகாப்புத் துறையில் மைல் கல்" என்றார்.
இந்த ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள தென் சீன மார்னிங் போஸ்ட், "ஜப்பான் - வியட்நாம் இடையே ஏற்பட்டுள்ள பாதுகாப்புத் துறைச்சார்ந்த ஒப்பந்தங்கள் மூலமாக வியட்நாம் நாட்டிற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்நுட்பங்கள், ரோந்து விமானங்கள் மற்றும் ரேடார் உள்ளிட்ட கருவிகளை ஜப்பான் வழங்கும்.
வளமிக்க தென் சீனக் கடலில் வியட்நாமின் பாதுகாப்பை அதன் மூலமாக நாம் உறுதி செய்திட முடியும்.
தென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவுக்கு புற அழுத்தத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு இத்தகைய ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சீனாவின் தலையீடற்ற சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கடல் பகுதியை உருவாக்க ஜப்பான் முயல்கிறது" என குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய கப்பல் போக்குவரத்து மூன்றில் ஒரு பங்கு கடந்து செல்லும் தென் சீன நீர்வழிப்பாதையில் பெய்ஜிங்கின் உறுதியை குறைக்கும் ஒரு மறைமுகமான வேலையாக இதனை கடலியல் நுண்ணரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.