டோக்கியோ (ஜப்பான்):ஜப்பானில் மேற்கு பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 வரை பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கோயாமா, இஷிகாவா, நிகாடா, ஹயோகோ பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடலில் ஏற்படும் ஆக்கிரோஷமான அலைகளால் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா அருகில் உள்ள மாகாணங்களில் கடற்கரைப் பகுதிகளில் மாலை 4 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அது ரிக்டர் அளவுகோலில் 7.6 வரை பதிவாகியுள்ளது எனத் தெரிவித்து உள்ளது.
இதனை அடுத்து இஷிகாவிற்கு தீவிர சுனாமி எச்சரிக்கையும், ஹொங்சு தீவின் மேற்கு பகுதி மற்றும் சில இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து, ஜப்பான் ஒளிபரப்பு நிறுவனமான (Japanese public broadcaster) என்ஹெச்கே டிவி (NHK TV) 5 மீட்டருக்கு மேல் கடல் அலைகள் எழும்பக் கூடும் என்பதால் மக்கள் தாழ்வான இடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடம் அல்லது உயரமான கட்டிடங்களுக்குச் செல்ல வேண்டும் என தகவல் வெளியிட்டு உள்ளது.