டோக்கியோ:நேரம் தவறாமையை கடைபிடிப்பதில் ஜப்பானியர்கள் கெட்டிக்காரர்கள் என்பதை உலகம் அறியும். அதற்கு உதாரணமாக சில நிமிடங்களில் ரயில் தாமதமாக வந்த காரணத்திற்காக, ரயில் ஓட்டி ஒட்டுமொத்த பயணிகளிடமும் மன்னிப்புக் கேட்டது, நேரம் தவறியதால் பாதிப்படைந்த பயணிகளுக்கு நஷ்டஈடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு கதைகள் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.
நேரம் தவறாமையை கடைபிடிப்பதில் கில்லாடிகளான ஜப்பானியர்கள், பொது மக்களுக்கு அநாவசியமாக இடையூறு ஏற்படுவதை தடுப்பதில் மேற்கொள்ளும் மெனக்கிடல்கள் குறித்த மற்றொரு உதாரணம் தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகின்றன. அது 10 நிமிடம் தாமதமாக வந்த விமானம் ஆயிரம் கிலோ மீட்டர் மீண்டும் திருப்பி விடப்பட்ட சம்பவம் தான் அந்த உதாரணம்..
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனடா விமான நிலையத்தில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி இரவு புறப்பட்ட தனியார் விமானம், புகுவோகா விமான நிலையத்தை அடைய திட்டமிடப்பட்டு இருந்தது. ஹனடா விமான நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் பல்வேறு பிரச்சினை காரணமாக ஏறத்தாழ 2 மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு மேல் புறப்பட்டுள்ளது.
இதனால் புகுவோகா விமான நிலையத்தை இரவு 10.10 மணிக்கு தாமதமாக சென்றடைந்தது. புகுவோகா விமான நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் விமானம் தரையிறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்த போதிலும், 10 நிமிடம் நேரம் தவறி வந்தது உள்ளிட்ட காரணங்களால் புகுவோகா விமான நிலைய நிர்வாகம் விமானத்தை திருப்பி அனுப்பியது.