இலங்கை:தமிழகம் முழுவதும்வருடந்தோறும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் உள்ளஅவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
அதேபோல தமிழகத்தின் உள்ள வேறு ஒருசில மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் வெகு விமரிசையாக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சூழ்நிலையில், இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.05) தொடங்கியுள்ளது.
மேலும், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலாத் துறை சார்பில் அங்கே பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் இந்த பொங்கல் விழா நடக்கும் நிலையில், முதல் நாளான இன்று (ஜன.05) காலை 10.30 மணிக்குத் திரிகோணமலை, சம்பூர் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், அமைச்சர்கள் மற்றும் திரைப்பட நடிகர் நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 200 காளைகளும், சுமார் 100க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.