புது டெல்லி : பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடக்கிறது. முன்னதாக வெள்ளிக்கிழமை (ஏப்.8) பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான் கான் உரையாற்றினார்.
அப்போது மீண்டும் ஒருமுறை இந்தியாவை புகழ்ந்து பேசினார். “அந்நாட்டில் இருக்கும் அரசாங்கம், தங்களது நாட்டு பிரச்சினையில் வெளிநாட்டினரை தலையிட விடுவதில்லை” எனக் கூறினார்.
இது குறித்து முன்னாள் தூதர் ஜிதேந்திர திரிபாதி கூறுகையில், “இந்த மூன்றரை ஆண்டுகளாக இம்ரான் கான் அமைதி காத்தது ஏன்? தன் நாடு அடிமையாகி வருவதையோ, பொம்மை குடியரசாக மாறுவதையோ அவர் அறியவில்லையா? இது ஆச்சரியமாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து இம்ரான் கானின் விமர்சனத்தையும் ஜிதேந்திர திரிபாதி கேள்விக்குள்ளாக்கினார். அப்போது, “தன் நாடு 'வெளிநாட்டு சக்திகளுக்கு' விற்கப்பட்டு, 'அடிமை'யாகிவிட்டதையும், உறவுகளை சீர்படுத்த அவர் எந்த ஒரு காரியத்தையும் செய்யவில்லை. இதற்கிடையில் இந்தியாவை அவர் இழுத்துள்ளார்” என்றார்.