இஸ்ரேல்: இஸ்ரேலில் நீதித்துறையில் சீர்த்திருத்தங்களை கொண்டுவர அந்நாட்டு அரசு முடிவு செய்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி மறுபரிசீலனை செய்யவோ, நீக்கவோ செய்யலாம், நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் குழுவில் அரசு பிரதிநிதிகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம் உள்ளிட்ட சீர்திருந்தங்கள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இந்த சீர்திருத்தங்கள் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் என்றும், நாட்டில் ஜனநாயகத்தை அழித்துவிடும் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த நீதித்துறை சீர்திருத்தங்களைக் கண்டித்தும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கண்டித்தும், கடந்த ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மார்ச் மாதம் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நெதன்யாகு உடல்நலக் குறைவு காரணமாக, ரமத்கானில் உள்ள ஷெபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத் துடிப்பு குறைவாக இருப்பதாகவும், அவருக்கு பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி, இன்று(ஜூலை 23) நெதன்யாகு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், பிரதமர் நலமாக இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.