இஸ்ரேல்: பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான எல்லைப் பிரச்னை நூற்றாண்டுகளைத் தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய காசா நகரை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், பாலஸ்தீனத்தை அடிப்படையாகக் கொண்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு இஸ்ரேலில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின.
இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய காசா உள்ளிட்ட பகுதியின் மீது ஏறத்தாழ 5 ஆயிரம் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த கொடூர தாக்குதலில் தற்போது வரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், சுமார் 300 பேர் உயிரிழந்ததாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் (Pushpa Kamal Dahal), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy), ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese), இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி: "இஸ்ரேலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் ஒற்றுமையாகவும், பக்கபலமாகவும் நாங்கள் நிற்கிறோம்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல்:இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலை நான் கண்டிக்கிறேன். நேபாளிகளில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், காயமடைந்த நேபாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: இஸ்ரேலின் நகரங்களில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பொழிகின்றன. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் வீரர்களை மட்டுமல்ல, வீடுகள் இன்றி தெருக்களில் வாழும் பொதுமக்களையும் கொன்றுள்ளனர். இஸ்ரேல் மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கிறது.