பாகிஸ்தான்:பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார். இதையடுத்து, இம்ரான்கானை கைது செய்யும் நோக்கில் அவர் மீது ஊழல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. தன்னை கைது செய்யவும், கொலை செய்யவும் சதி நடப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார்.
அதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றபோது, நீதிமன்ற வளாகத்திலேயே இம்ரான்கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பதாக இஸ்லாமாபாத் காவல்துறை தெரிவித்தது.
இதையடுத்து இம்ரான்கான் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜரானவரை கைது செய்ததற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இம்ரான்கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும் கூறியது. இதையடுத்து இம்ரான்கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அண்மையில், அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபியின் ஜாமீன் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையில், மே 9 கலவர வழக்கு, நிதி மோசடி வழக்கு உள்ளிட்ட ஆறு வழக்குகளின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்ரான்கானின் மனைவியும் இதே கோரிக்கையுடன் தனியாக மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நேற்று (ஜூலை 27) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமீர் பரூக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதி அமீர் பரூக் இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்குகளை மாற்றுவது தொடர்பாக மனுதாரர்கள் சம்மந்தப்பட்ட அரசு ஆணையத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.