தெஹ்ரான் :பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது பதற்றத்தை கூட்டியுள்ளது. அண்மையில் ஈராக், சிரியா மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானை இப்போது தாக்கியுள்ளது.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் ஈரானில் நடந்த காசிம் சுலைமானி நினைவேந்தல் நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.