தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தாய்மொழி தினம் 2023: பன்மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் யுனெஸ்கோ! - பன்மொழிக் கல்வி

உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 'பன்மொழிக் கல்வியின் அவசியம்' என்ற கருப்பொருளை வலியுறுத்தி யுனெஸ்கோ இன்று தாய்மொழி தினத்தை கொண்டாடுகிறது.

International
International

By

Published : Feb 21, 2023, 1:21 PM IST

ஹைதராபாத்: உலக தாய்மொழி தினம் இன்று(பிப்.21) கொண்டாடப்படுகிறது. உலகின் பன்மொழி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், உலகம் முழுவதும் உள்ள பன்முக மொழி, கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மொழிகளை பாதுகாக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் இந்த தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, கடந்த 1999ஆம் ஆண்டு தாய்மொழி தினத்தை அங்கீகரித்தது. பங்களாதேஷ் அரசின் தொடர் முயற்சிகளாலும், உலக நாடுகளின் ஆதரவாலும் பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது. உலகம் முழுவதும் பேசப்படும் ஆயிரக்கணக்கான மொழிகளில் ஐம்பது சதவீத மொழிகள் அழியும் தருவாயில் உள்ளதால், அவற்றை பாதுகாக்கும் நோக்கில் இந்த தினம் கொண்டுவரப்பட்டது.

யுனெஸ்கோ ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளை வைத்து, தாய்மொழி தினத்தை கொண்டாடுகிறது. 2023ஆம் ஆண்டில், "பன்மொழிக் கல்வியின் அவசியம்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் தாய்மொழி தினத்தை கொண்டாடுகிறது. தாழ்மொழியை அடிப்படையாகக் கொண்ட, பன்மொழிக்கல்வி உலகில் பெருமளவுக்கு பேசப்படாத மொழிகளையும் பாதுகாக்க உதவும் என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. சிறுபான்மையினர், பழங்குடியினரின் மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், அழியும் நிலையில் உள்ள மொழிகளை காக்கவும் பன்மொழிக்கல்வி உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியின் சிறப்பு குறித்து பேசும்போது நெல்சன் மண்டேலா, "நீங்கள் ஒரு மனிதனிடம் அவனுக்கு புரியும் மொழியில் பேசினால், நீங்கள் பேசுவது அவன் மூளைக்கு செல்லும் - ஆனால் நீங்கள் அவனது தாய்மொழியில் பேசும்போது, அது அவனுடைய இதயத்துக்கு செல்லும்" என்று கூறினார்.

ஹரிஜன் பத்திரிகையில் மகாத்மா காந்தி, "எனது தாய்மொழியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தபோதும், தாயின் மார்போடு ஒட்டிக்கொள்வதுபோல, எனது தாய்மொழியை பற்றிக் கொள்ள வேண்டும். அது மட்டுமே என்னை உயிரோடு வைத்திருக்கும்" என்றார். குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: உலக தாய்மொழி தினம்: 'தமிழ்' என 500 பேருக்கு டாட்டூ வரைந்து உலக சாதனை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details