சிங்கப்பூர்:சிங்கப்பூர் நாட்டில் உள்ள ஜலசந்தியில் ஜூலை 31 ஆம் தேதி திங்கட்கிழமை உல்லாசக் கப்பலில் பயணம் செய்த தனது தாய் கடலில் விழுந்து உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதாவது, இந்தியாவைச் சேர்ந்தவர் ரீட்டா சஹானி (64) மற்றும் அவரது கணவர் ஜகேஷ் சஹானி (70) தம்பதியினர். இவர்களுக்கு அபூர்வ் சஹானி மற்றும் விவேக் சஹானி என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவர் மனைவி இருவரும் ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸில் என்ற சொகுசுக் கப்பலில் பயணம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மறுநாள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று ரீட்டா சஹானி கப்பலில் இல்லாததை அறிந்த அவரது கணவர் ஜகேஷ் சஹானி, தனது மனைவியைக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ரீட்டா சஹானியை கப்பலில் தேடும் பணியில் கப்பல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடும் பணியின் நடுவே ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவரது மகன் அபூர்வ சஹானி, கப்பலில் இருந்து ஏதோ விழுந்த சப்தம் கேட்டதாக எச்சரிக்கை ஒலி கிடைத்தாக கப்பல் பணியாளர்கள் கூறியதாகவும், ஆனால் அது தனது தாய் ரீட்டா சஹானியாக இருக்காது எனவும், தனது தாய்க்கு நீச்சல் தெரியாது என்றும், அபூர்வ சஹானி தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸில் இருந்த சிசிவிடி காட்சி மூலம் சோதனை செய்தனர். அதில் ரீட்டா சஹானி கப்பலில் இருந்து குதித்தது பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்த 64 பெண் ரீட்டா சஹானி கப்பலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தற்போது அந்த பெண்ணின் சடலத்தை தேடும் பணியில், சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் குதித்ததற்கான காரணத்தையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதாவது அந்த கடல் பகுதியானது 113 கிலோ மீட்டர் நீளமும், 19 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட மலாக்கா ஜலசந்திக்கும், தென்சீனக் கடலுக்கும் இடையேயான போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.