அமெரிக்கா:அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அல்கரின் என்ற பகுதியில் கடந்த 19ஆம் தேதி அன்று, இரண்டு இந்தியர்கள் பணத்தை மாற்றுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென இந்தியர்களை தாக்கியது. பின்னர், அவர்களிடமிருந்து பணத்தை பறிக்க முயன்றனர்.
அப்போது இருவரும் தடுத்த நிலையில், மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இந்தியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மற்றொரு இந்திய பலத்த காயமடைந்தார். இதையடுத்து அந்த கும்பல் அவர்களிடமிருந்த பத்தாயிரம் டாலர் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த இந்தியரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என மெக்சிகோவில் உள்ள இந்திய தூதரகம் காவல்துறையை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மெக்சிகோவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம். தூதரகம் உயிரிழந்த இந்தியரின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்யும். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என மெக்சிகோ அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மெக்சிகோ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்மந்தப்பட்ட கொள்ளையர்கள் அவர்களது உடைமைகளை வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பாக மெக்சிகோ அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க போராடுவதாகவும் மெக்சிகோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் குறைந்த அளவே இந்தியர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 8,000 இந்தியர்கள் மட்டுமே அந்நகரத்தில் வசித்து வருகின்றனர். மெக்சிகோவைத் தவிர, குவாடலஜாரா, மான்டேரி, குர்னவாக்கா, குவெரெட்டாரோ, கான்கன் ஆகிய நகரங்களில் இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்த நகரங்களில் வாழும் இந்தியர்கள் பெரும்பாலும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்.
இதையும் படிங்க: அமெரிக்காவின் சியாட்டலில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 3 பேர் பலி!