தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்.. இந்தியா ஆதரவு - திரிணாமுல் காங்கிரஸ் வரவேற்பு!

India has voted in favour of a UN draft: இஸ்ரேலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்த வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 145க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்.. இந்தியா ஆதரவு - திரிணாமுல் காங்கிரஸ் வரவேற்பு!
இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்.. இந்தியா ஆதரவு - திரிணாமுல் காங்கிரஸ் வரவேற்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 1:30 PM IST

வாஷிங்டன்: கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான போர் தொடங்கியது. முதலில், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் பகுதிகள் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இதனையடுத்து, அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வகையில், வான்வழி மட்டுமின்றி தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் கையில் எடுத்தது. இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது விலை மதிப்பற்ற உயிரை இழந்தனர்.

மேலும், தங்களது உடமை மற்றும் உறவினர்களையும் பறி கொடுத்தனர். இவர்களுக்காக தற்காலிக நிவாரண முகாம்களும், உணவுப் பொருட்களும், ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பல சர்வதேச தன்னார்வ அமைப்புகளால் வழங்கப்பட்டன. இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விதமாக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் விளைவாக, ஒவ்வொரு கட்டங்களாக இந்தியர்கள் அனைவரும் இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களை வரவேற்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநிலப் பிரதிநிதிகள் ஆகியோர், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் இஸ்ரேல் ராணுவம், எல்லைப் பகுதியான காசாவை முழுவதுமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், காசாவில் உள்ள ஒரு முக்கிய மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் மேலும் பல உயிர்கள் போயின. இதற்கு, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலையும், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பையும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டன. மேலும், இன்றும் முடிவடையாத போரில், காசாவின் பெரும்பாலான பகுதிகள் அழிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. அது மட்டுமல்லாமல், இந்தப் போரில் அதிகளவில் குழந்தைகளே பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்தது.

இதனிடையே, கடந்த நவம்பர் 9 அன்று ‘கிழக்கு ஜெருசலேம், சிரிய கோலன் உள்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில் இஸ்ரேல் குடியேற்றங்கள்’ என்ற தலைப்பில் வரைவுத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தின்படி, பாலஸ்தீனிய ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 145க்கும் மேலான நாடுகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

மேலும், இந்தியாவின் ஆதரவை வரவேற்பதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகேட் கோகலே தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “இந்திய குடியரசு, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன். பாலஸ்தீனத்தை இஸ்ரேல் குடியேற்றங்கள் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:சூடான் டார்பூர் பகுதியை கைப்பற்றிய ஆர்எஸ்எப் ராணுவம்.. ஒரே நாளில் 800 உயிரிழப்பு என ஐ.நா தகவல்!

ABOUT THE AUTHOR

...view details