டெல்லி: சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவத்தொடங்கிய போது, சீனாவில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.
கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சீனப் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் 22,000 இந்திய மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதுகருதி ஒன்றிய அரசு மாணவர்கள் சீனாவிற்குச்செல்ல அனுமதி அளிக்கும்படி அந்நாட்டிடம் வலியுறுத்தி வந்தது. ஆனால், சீனா அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகத்தெரிகிறது. இதையடுத்து இந்தியா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை குறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் ஏப்ரல் 20ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சீன நாட்டினருக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசா இனி செல்லுபடியாகாது. 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் சுற்றுலா விசாவும் இனி செல்லாது. பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளைச்சேர்ந்த பயணிகள் மட்டும் இந்தியா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவிடம் வலியுறுத்தல்:இந்திய அரசால் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதி அட்டை, இந்திய விசா அல்லது இ-விசா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் அட்டை, வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை வைத்திருக்கும் பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.