ஷார்ம் எல் ஷேக்: ஐநா பருவநிலை மாநாடு (UNFCCC - COP 27) எகிப்தின் ஷார்ம் எல் ஷேக்கில் நவம்பர் 6ஆம் தேதி தொடங்கியது. வரும் 18ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமை வகித்து வருகிறார். இன்று (நவம்பர் 15) இந்தியாவின் தேசிய அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ஓராண்டுக்கு முன் கிளாஸ்கோவில் நடந்த பருவ நிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, 2070-க்குள் ஒட்டுமொத்தமாக கரியமில வாயு வெளியேற்றத்தை தடுப்பது இந்தியாவின் நோக்கம் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு நாட்டின் முக்கியமான பொருளாதார துறைகளில், குறைந்த அளவு கரியமில வாயு வெளியேற்றத்திற்கான பணிகளை மேற்கொள்ள உதவியது.
2030 பருவநிலை இலக்குகளின் அதிகரிக்கப்பட்ட லட்சியத்திற்கான அழைப்புக்கு மதிப்பளித்து இந்தியா 2022 ஆகஸ்டில் தேசிய தீர்மானகரமான பங்களிப்பை காலத்திற்கேற்ப மாற்றியுள்ளது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி, மின்சார போக்குவரத்து, எத்தனால் கலந்த எரிபொருள்கள், பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய மாற்று எரிசக்தி முன்முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
இந்தியாவால் தொடங்கப்பட்டுவரும் சர்வதேச சூரிய எரிசக்திக் கூட்டணி, வலுவான சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்க உதவுகிறது. உலகளாவிய நன்மைக்கு கூட்டுச் செயல்பாடு என்ற எங்களின் நெறிமுறைக்கு இது சான்றாக உள்ளது. 1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின், ஒட்டுமொத்த கரியமில வாயு வெளியேற்றம் உலக பங்கில் 4 சதவீதத்திற்கும் குறைவாகும். இதில் வருடாந்தர தனிநபர் பங்கு உலகளாவிய சராசரியில், மூன்றில் ஒரு பங்காகும். இருப்பினும் இது தொடர்பான கடினமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.