இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் சவீரா பிரகாஷ் என்ற இந்து பெண் ஒருவர் புனர் மாவட்டத்தில் உள்ள பிகே-25 பொது தொகுதிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு தேர்தலில் பொதுத் தொகுதியில் இந்து பெண் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
பாகிஸ்தான் நாட்டின் 16வது தேசிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் வரும் 2024, பிப்ரவரி 8ஆம் தேதி அந்நாட்டில் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தை சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல்முறையாக பொதுத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவீரா பிரகாஷ் என்ற அப்பெண் புனர் மாவட்டத்தில் பிகே-25 பொது தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பிரகாஷின் தந்தை ஓம் பிரகாஷ், ஒரு ஓய்வு பெற்ற மருத்துவர் ஆவார்.
மேலும், இவர் அந்நாட்டின் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் (பிபிபி) உறுப்பினராக இருந்துவருகிறார். இதற்கிடையே, இவரின் மகள் சவீரா பிரகாஷ் தனது தந்தை உறுப்பினராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் இந்த தேர்தலில் களம் காண்பதற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.