இஸ்லாமாபாத் :சைபர் முறைகேடு வழக்கில் இருந்து விரைவில் விடுவிக்கப்பட இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் ரானுவ தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சிறையில் வைத்தே கைது செய்யப்பட்டார்.
போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. அது முதலே அரசு விவகாரங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே வெளிநாடு மற்றும் அரசு சார்ந்த பயணங்கள் மற்றும் சந்திப்புகளில் தனக்கு வழங்கப்பட்ட விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் இருந்து முறைகேடு மூலம் கைப்பற்றி விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் பாகிஸ்தான் துணை ராணுவத்தின் பாதுகாப்பு முனையங்கள், ராவல்பிண்டி ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்கள் தாக்கப்பட்டன. இதுகுறித்து பாகிஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.