பாகிஸ்தான் பஞ்சாப் மகாணம் வஜிராபாத் நகரில், பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று (நபம்பர் 4) பிரம்மாண்ட பேரணி நடந்தது. அப்போது அடையாளம் தெரியாத சிலர் இம்ரான் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், அவரது காலில் குண்டடிபட்டது. மேலும 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இம்ரான் கான் உள்ளிட்ட காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தே இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதில், “என்னை கொல்ல சதி திட்டம் நடப்பது எனக்கு முன்பே தெரியும். இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் எனபதும் நான் அறிந்த ஒன்றே. நான் நான்கு தோட்டாக்களால் தாக்கப்பட்டேன். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும்” என கூறினார்.
மருத்துவமனையில் இம்ரான் கானை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நலமாக உள்ளதாகவும், அவரது கால் எலும்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சில நாள்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிகெட் வீரர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது ட்விட்டட் பக்கத்தில், “இம்ரான் கான் மீதான இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அல்லாதான் பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இவரைத்தொடர்ந்து முன்னாள் வீரர் சுஐப் அக்தர் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “இம்ரான் கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டேன். அல்லாவின் அருளால் அவர் நலமாக உள்ளார். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முன்னாள் வீரரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “வஜிராபாத்தில் நடந்த நிகழ்வை நினைத்து கவலையடைகிறேன். இம்ரான் மற்றும் அங்குள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்த சமயத்தில் ஒரு நாடாக நாம் ஒன்றுபட வேண்டும். நமது தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு - முபீன் குறித்து பரபரப்பு தகவல் அளித்த மாமியார்