ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த வணிக வளாகத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
அமெரிக்காவின் மெக்கின்னியில் வசித்து வந்தவர் ஐஸ்வர்யா தடிகொண்டா. இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் இளநிலை பொறியியல் படிப்பு முடித்துவிட்டு முதுநிலை படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு படிப்பை முடித்தவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஐஸ்வர்யா ஒரு நண்பருடன் டல்லாஸில் ஆலன் பிரீமியம் அவுட்லெட் என்னும் மாலில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது துப்பாக்கி ஏந்தியபடி வந்த மொரிசியோ கார்சியா என்னும் நபர் நாலாபுறமும் துப்பாக்கியால் சரமாரியாக சுடத்துவங்கினார். சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் மொரிசியோ கார்சியாவை துப்பாக்கியில் சுட்டனர். அதற்குள் கார்சியா நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஐஸ்வர்யா உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மொரியா கார்சியா போலீசார் சுட்டதில் உயிரிழந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இந்திய தூதரகம் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளது, மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
"மே 6 அன்று டெக்சாஸில் உள்ள ஆலன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த ஐஸ்வர்யா தட்டிகொண்டாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். எங்கள் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்ய களத்தில் உள்ளனர். நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று இந்திய தூதரகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது பொறியாளர் ஐஸ்வர்யா தட்டிகொண்டாவின் உயிரைப் பறித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். அவர்கள் இந்த மாபெரும் வெற்றிடத்தை வெல்லும் சக்தியை திரட்ட பிரார்த்திக்கிறேன். என பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த நேரத்தில் மாலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த ஐஸ்வர்யா தட்டிகொண்டா, பெர்ஃபெக்ட் ஜெனரல் கான்ட்ராக்டர்ஸ் எல்எல்சி என்ற நிறுவனத்தில் திட்டப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களில் ஐஸ்வர்யா தட்டிகொண்டாவும் இருந்ததை அவரது ஒரு குடும்ப உறுப்பினர் தனியார் தொலைக்காட்சிக்கு உறுதிப்படுத்தி உள்ளார்.
ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் இந்தியாவில் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக ஐஸ்வர்யா டெக்சாஸில் வசித்து வந்துள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை தெலங்கானா மாநிலத்தின், ரெங்காரெட்டி மாவட்டத்தில், மாவட்ட நீதிபதியாக உள்ளார் என கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐஸ்வர்யாவின் நண்பர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும், அவர் குறித்த விவரம் கண்டறியப்படவில்லை என்றும் அங்குள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் பஞ்சாப் சகோதரர்கள் சுட்டுக் கொலை - என்ன காரணம் தெரியுமா?