போர்ட்லேண்ட்: டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணும் பயணத்தின்போது வெடித்த நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை நேற்று (ஜுன் 28) தெரிவித்து உள்ளது.
வடக்கு அட்லாண்டிக் கடலின் மேற்பரப்பில் இருந்து 12,000 அடிக்கு (3,658 மீட்டர்) கீழ் உள்ள கடல் பரப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட டைட்டன் கப்பலின் கழிவுகள், அமெரிக்காவின செயின்ட் ஜான்ஸ், நியூபவுண்ட்லாந்திற்கு வந்து சேர்ந்ததாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த துண்டுகள் கனடா நாட்டைச் சேர்ந்த கடலோரக் காவல் படை தளத்தில் இறக்கப்பட்டு உள்ளன.
விபத்துக்குள்ளான கப்பலின் இடிபாடுகளில் இருந்து, எஞ்சியவற்றை மீட்பதும், ஆய்வு செய்வதும் மற்றும் கடந்த வாரத்தில் நிகழ்ந்த டைட்டன் கப்பல் வெடித்த நிகழ்வு, அதில் பயணம் செய்த 5 பேரின் நிலை உள்ளிட்டவைகள், இந்த விசாரணையின் முக்கிய பகுதியாக உள்ளது. 22 அடி (6.7 மீட்டர்) நீளம் கொண்ட இந்த கப்பலில் இருந்து, பல நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, பல்வேறு கழிவுகள் மீட்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க கடலோர காவல் படையின் தலைமை கேப்டன் ஜேசன் நியூபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "டைட்டனின் பேரழிவு இழப்புக்கு வழிவகுத்த காரணிகளைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் கணிசமான அளவு வேலை செய்ய வேண்டி உள்ளது. மேலும் இது போன்ற ஒரு சோகம் மீண்டும் நிகழாமல் இருப்பதை இது உறுதிப்படுத்த உதவும்" என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
உடல் பாகங்கள் என்று சந்தேகிக்கப்படும் கழிவுகள், அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முறையான பகுப்பாய்வு மேற்க்கொள்ளப்பட உள்ளது. டைட்டன் கப்பல் விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, கடல்சார் புலனாய்வு வாரியம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக நியூபர் குறிப்பிட்டு உள்ளார்.