நாடு கடந்து, மொழி கடந்து, கண்டங்கள் கடந்து இசையால் உலக அளவில் பெயர்பெற்றவர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசை இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இத்தகைய பெருமைமிகு ஆஸ்கர் நாயகனை கவுரவிக்கும் விதமாக கனடா நாட்டின் மார்க்கம் நகரின் மேயர் அங்குள்ள தெரு ஒன்றிற்கு ரஹ்மானின் பெயரை வைத்துள்ளார். மார்க்கம்(Markham) நகரின் மேயர் ஃபிராங்க் ஸ்கார்பிட்டி மற்றும் கனடா மக்களிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கு மரியாதையும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டரில் , ‘இதை நான் என் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததில்லை. கனடாவின் மார்க்கம் மேயர் (ஃபிராங்க் ஸ்கார்பிட்டி) மற்றும் அவரது ஆலோசகர்கள், இந்திய துணைத் தூதரக ஜெனரல் (அபூர்வா ஸ்ரீவஸ்தவா) மற்றும் கனடா மக்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். ஏ.ஆர். ரஹ்மான் என்பது என்னுடைய பெயர் மட்டும் அல்ல. அதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள்.
கருணை என்பது நம் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கடவுளின் குணமாகும். மேலும் நாம் ஒவ்வொருவரும் அந்த இரக்கமுள்ளவரின் ஊழியராக மட்டுமே இருக்க முடியும். எனவே, அந்தப்பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.