ஹவாய்: அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரின் உணவுகளோடு ஒன்றி லஹைனா பகுதியில் வாழ்ந்த 150 வருடங்கள் பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலமரம் ஒன்றும் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.
அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாயில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. இந்த காட்டுத்தீ அருகே உள்ள மாய் தீவிற்குப் பரவிய நிலையில் அங்கிருந்து, உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லஹைனா பகுதிக்கும் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 150 வருடங்கள் பழமையான ஆலமரம் ஒன்று எரிந்து சாம்பலாகியுள்ளது பலருக்கும் வேதனை அளித்துள்ளது.
மேலும் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சேதமான நிலையில் ராணுவமும், பேரிடர் மீட்பு படையும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயில் இருந்து தப்பிக்கப் பலர் கடலுக்குள் குதித்து உயிர் தப்ப முயற்சித்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. காலநிலை மாற்றம், காற்றில் ஈரப்பதம் இன்மை, உலர்ந்த மரங்கள் மற்றும் செடிகள் உள்ளிட்ட பல காரணங்களால் சூறாவளிக் காற்றுடன் சேர்ந்து காடு மொத்தமும் தீ பற்றி உள்ளதாகக் காலநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹவாய் காட்டுத்தீ ஒரு மிகப்பெரிய பேரழிவு என அறிவித்து உள்ளார். நெருப்பு வனமாகக் காட்சியளிக்கும் ஹவாய் தீவு, லஹைனா போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் பலர் விமான நிலையங்களில் கூடியுள்ளனர். கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் இந்த காட்டுத்தீ தொடர்பான காணொளிகளை மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இயற்கையின் பேரழிவு குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.