ரஃபா (காசா பகுதி): அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸ் அமைப்பினரால் 220 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த நிலையில், அவர்களைப் பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்கங்களில் மறைத்து வைத்திருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.
காசாவில் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 85 வயதான யோஷிதவ் லைஃப்ஷிட்ஸ் (Yocheved Lifshitz) மற்றும் 79 வயதான நூரித் கூப்பர் (Nurit Cooper) ஆகிய இரு வயதான இஸ்ரேலியப் பெண்களை, ஹமாஸ் அமைப்பினர் நேற்று (அக் 23) விடுதலை செய்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் இருவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (International Red Cross) ஒப்படைக்கப்பட்டதாகவும், அந்த இருவரின் கணவர்கள் பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரிடமே உள்ளனர் என்றும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, "ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்த இருவரும், விரைவில் அவர்களின் அன்பிற்குரியவர்களைச் சந்திப்பார்கள் என்று நம்புகிறோம்" என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.