பாகிஸ்தான்:பாகிஸ்தானில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார். இதையடுத்து, இம்ரான்கானை கைது செய்யும் நோக்கில் அவர் மீது ஊழல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. அதில் ஒன்று தோஷகானா வழக்கு. இந்த வழக்கை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தொடர்ந்திருந்தது.
இம்ரான் கான் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது அளிக்கப்பட்ட பரிசுகள், விலை உயர்ந்த பொருட்களை அரசுக்கு சொந்தமான தோஷகானா என்ற இடத்தில் சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆனால், இம்ரான் கான் அந்த பரிசுப் பொருட்களை சேமித்து வைக்காமல், விற்பனை செய்து அந்த பணத்தையும் மோசடியாக எடுத்துக் கொண்டதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
தோஷகானா ஊழல் வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கு கடந்த 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து உடனடியாக இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.