ஒட்டாவா, ஒன்டாரியோ: கூகுள் நிறுவனம், நேற்று (ஜூன் 29) கனடா நாடு முழுவதிலும் உள்ள தங்களது தளங்களில் இருக்கும் கனடா நாட்டு செய்திகளுக்கான இணைப்புகளை நீக்குவதாக தெரிவித்து உள்ளது. இது டிஜிட்டல் வல்லுநர்கள், ஊடகங்களுக்கு தாங்கள் பகிரும் அல்லது மறுபரிசீலனை செய்யும் உள்ளடக்கத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நோக்கில், புதிய சட்டம் இயற்றப்பட்டு உள்ளதால், கனடா நாட்டு செய்தி இணைப்புகளை, கூகுள் நிறுவனம் செய்திகளில் இருந்து நீக்க உள்ளது.
உள்ளூர் செய்திகளை முன்னிலைப்படுத்தும் இணையம் அல்லது செயலிகள் மூலம் கிடைக்கும் தனிப்பயனாக்கப்பட்ட திரட்டி சேவை - மற்றும் மொபைல் போன்களில் உள்ள அம்சமான கூகுள் டிஸ்கவர் ஆகியவற்றிலிருந்து உள்ளடக்கத்தைக் கண்டறிய மக்களுக்கு உதவும் அம்சமும் நீக்கப்படுவதாக கூகுள் தெரிவித்து உள்ளது.
கூகுள் நிறுவனம், அதன் விளம்பரங்களின் மூலம் சம்பாதிக்கும், பில்லியன் டாலர்களில் ஒரு சிறிய பங்கை செலுத்துவதற்குப் பதிலாக, கனடா மக்கள் செய்திகளை தெரிந்து கொள்ள தடை விதிக்கும் நடவடிக்கையாக இது கருதப்படுவதாக, கனடா நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் பாப்லோ ரோட்ரிகுயிஜ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். கூகுள் நிறுவனம், கனடா மக்களை கொடுமைப்படுத்த முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம், தனது முடிவை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசிடம் தெரிவித்து உள்ளது. அது எப்போது செய்திகளை அகற்றத் தொடங்கும் என்பதை உறுதியாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த புதுச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரத்தில், கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டத்தின் எதிரொலியாக, கனடா நாட்டு செய்திகள் மட்டுமே நீக்கப்பட உள்ளன. எனவே கனடா மக்கள், மற்ற பிரபல செய்தி இணையதளங்களில் இருந்து தங்கள் நாடுகளைச் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.
மெட்டா நிறுவனம், கடந்த வாரம் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, அதன் சமூக ஊடக தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து செய்திகளை நீக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது. உள்ளூர் வெளியீட்டாளர்களுடன் மேற்கொண்டு உள்ள ஒப்பந்தங்களும், இதன் மூலம் முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டு உள்ளது.