சூரிய ஆற்றல் துறையில் முன்னோடிகளில் ஒருவரான ஹங்கேரிய-அமெரிக்க உயிர் இயற்பியலாளர் டாக்டர் மரியா டெல்கேஸ் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் இன்று (டிச.12)சிறப்பு டூடுள் வெளியிட்டு கூகுள் சிறப்பித்துள்ளது. சூரிய ஆற்றலில் சிறந்து விளங்கிய மரியா "தி சன் குயின்" என்பதை நினைவு கூற கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற டெல்க்ஸ் 1952 ஆம் ஆண்டு இதே நாளில்(டிச.12) சொசைட்டி ஆஃப் வுமன் இன்ஜினியர்ஸ் அமைப்பின் சாதனை விருதை முதல் முறையாக பெற்றார்.
சூரியனின் சக்தி மனித வாழ்க்கையை மாற்றும் என்று நம்பியவர்களில் டெல்க்ஸும் ஒருவர் ஆவார். 1900 ஆம் ஆண்டு ஹங்கேரியின் புடாபெஸ்டில் டெல்க்ஸ் பிறந்தார். ஈட்வோஸ் லோராண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் 1920 இல் பட்டம் பெற்றார். 1924 இல் அதே பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் வாங்கினார். பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே அமெரிக்காவிற்குச் உயிரியல் இயற்பியலாளராக பணியாற்றினார். இதனையடுத்து 1937 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
பின்னர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்த சூரிய ஆற்றல் குழுவின் உறுப்பினராக சேர்ந்தார். அக்குழுவினருடன் இணைந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் போது கடல்நீரை குடிநீராக மாற்றும் சூரியசக்தியால் செயல்படக்கூடிய கருவியை வடிமைக்க டெல்க்ஸ் அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்டார். இவரின் அரிய கண்டுபிடிப்பு பசுபிக் கடலின் கரையோரங்களில் இருந்த போர் வீரர்களால் பயன்படுத்தப்பட்டது.