அமெரிக்கா:தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள ஃபீனிக்ஸ் நகர், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் உலக அளவில் கடந்த 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஜூலை மாதத்தில் அதிகம் பதிவாகி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர். இது குறித்த ஐநாவின் அறிக்கையில் புவி வெப்பமயமாதல் முடிந்து அடுத்த கட்டத்தை தொடங்கி விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கடல் வெப்பம் மற்றும் அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பனிப்பாறைகள் உருகி வரும் நிலையில், இந்த ஆண்டு உலகம் அதிக வெப்பமயமாதலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் என ஐநாவும், ஆராய்ச்சியாளர்களும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில், உலகம் இதுவரை கண்டிராத வெப்பத்தின் உச்சத்தை 2023 ஜூலை மாதம் கண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், ஐரோப்பாவின் பல பகுதிகள் மற்றும் அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் நகர் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையான வெப்ப அலையைச் சந்தித்திருக்கிறது. அங்குள்ள மேச நகர், கடந்த 16 நாட்களில் முதல் முறையாக ஒரே இரவில் 90 டிகிரி பாரன்ஹீட் (32.2 டிகிரி செல்சியஸ்) வெப்பத்தை கடந்தது.
வெப்ப அலையால் அங்குள்ள மக்கள் தள்ளாடி வரும் நிலையில், நாளை வரை (ஜூலை 29) அங்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பம் அடுத்தடுத்து ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் 110 டிகிரி பாரன்ஹீட் (43.3 டிகிரி செல்சியஸ்) வரை சென்று 108 டிகிரி பாரன்ஹீட்டாக (42.2 டிகிரி செல்சியஸ்) படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்த வாரம் முழுவதும் தென்-மத்திய அரிசோனாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும், வெப்பம் தனிய வாய்ப்புள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வெப்பம் காரணமாக ஐரோப்பா, தென்மேற்கு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஃபீனிக்ஸின் தலைநகரமான மரிகோபாவில் கடந்த வாரத்தில் 25 பேர் வெப்பம் தொடர்பான பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த வெப்பம் காரணமாக அங்கு 425 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெப்பமயமாதல் காரணமாக ஏற்பட்டு வரும் பாதிப்புகளுக்கு ஐரோப்பா, அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவும் உட்பட்டு உள்ளது. அந்த வகையில், நாட்டின் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், சில பகுதிகளில் மழை கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதலின் விளைவு என அறிவுறுத்தும் ஆராய்ச்சியாளர்கள் இந்த உலகை பழைய நிலைக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமான ஒன்று எனவும், இருந்த போதிலும் அதற்கான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இல்லை என்றால், யாரும் எதிர்பார்த்திடாத அளவுக்கு பெரும் இயற்கை பேரிடர்களை மனித குலம் எதிர்கொள்ளும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமான இன்று, இந்த அதிர்ச்சிகரமான ஆய்வுகள் அடங்கிய தரவுகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியாவின் ஐநா தூதர் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 62வது அமர்வின் தலைவராக பொறுப்பேற்பு!