நியூயார்க்: அமெரிக்காவின் டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் 100 செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில், 2022ஆம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலை நேற்று (மே 23) வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த தொழிலபதிபரும், பெரும் பணக்காரர்களுள் ஒருவருமான கௌதம் அதானி, போபாலை சேர்ந்த வழக்கறிஞரும், சமூக செயற்பட்டாளாருமான கருணா நந்தி, காஷ்மீரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாமிதிர் புதின், சீன அதிபர் சீ சின்பிங், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
அதானி குறித்து டைம்ஸ் இதழில்,"முன்பு உள்ளூர் தொழிலதிபராக இருந்த அதானி தற்போது, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் அனல்மின் உற்பத்தி, நுகர்வோர் சரக்கு விற்பனை என தனது வளர்ச்சியை விரிவுபடுத்தியுள்ளார். அதானி குழுமம் இந்தியாவில் முன்னணியில் உள்ளது. இருப்பினும், அவர் அதிகம் வெளிச்சத்திற்கு வராமல் தனது சாம்ரஜ்யத்தை கட்டி எழுப்பி வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.