லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (The free trade agreement -FTA) மேற்கொள்வது குறித்து இருநாட்டு அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பல கட்டங்களாக உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
5ஆம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜூலை 29ஆம் தேதி நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் 15 கொள்கைகள் குறித்து பல்வேறு அமர்வுகளில் இருதரப்பு நிபுணர்களும் விரிவாக விவாதித்தனர். 2022 அக்டோபர் மாதத்திற்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே நான்கு நாட்கள் பயணமாக லண்டன் மேயர் வின்சென்ட் கீவெனி இந்தியா வந்திருந்தார். அப்போது, இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (SEBI) அமைப்பினர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், இந்தியா- இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், ஒப்பந்த வரைவு தீபாவளிக்குள் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் லண்டன் மேயர் வின்சென்ட் கீவெனி தெரிவித்துள்ளார். லண்டன் திரும்பிய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "தீபாவளிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தீர்க்கப்பட வேண்டிய சில சிக்கல்கள் உள்ளன, ஆனால் நாங்கள் அதைச் செய்து முடிப்போம் என்பதில் இரு தரப்பிலும் நம்பிக்கை உள்ளது. இந்த ஒப்பந்தம், வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுக்கு வலுவான அடித்தளமாக அமையும்" என்று தெரிவித்தார்.
மேலும், வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் மோடி இங்கிலாந்து செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தைவான் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்கா, சீனா வெளியுறவுத்துறை அதிகாரிகள் சந்திப்பு