டாக்கா: மேற்கு வங்க மாநிலமான பெனபோலில் இருந்து புறப்பட்ட பெனபோல் எக்ஸ்பிரஸ் வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள கமலாபூர் ரயில் நிலையம் அருகில் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் இரவு 9 மணியளவில் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர். வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அந்நாட்டு தீயணைப்புத்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளனர். இந்த பெனபோல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 292 பயணிகள் இந்தியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கோபிபாக் பகுதி ரயில் நிலையம் அருகில் சென்ற போது இரவு 9 மணிக்கு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் இறந்தவர்களில் இரண்டு பேர் சிறு குழந்தைகள் என தீயணைப்புத்துறை அதிகாரி முகமது மெயின் உத்தின் தெரிவித்தார். வங்கதேசத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி அளித்துள்ள தகவலின் படி, ரயிலில் சில இந்தியர்களும் பயணம் செய்துள்ளதாக தெரிகிறது. ரயில்வே அதிகாரிகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை உடனடியாக கூற முடியாத நிலையில், அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை டாக்கா மருத்துவ கல்லூரியில் தீ விபத்து பிரிவில் அனுமதித்தனர்.