கேப் கனாவெரல்: சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி கடந்த 6 மாதங்கள் ஆய்வு மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் இன்று (செப். 4) அதிகாலை 12.17 மணி அளவில் பூமிக்குத் திரும்பியதாக நாசா தெரிவித்துள்ளது. விண்கல கேப்சியூல் மூலம் அட்லாண்டிக் கடற்பகுதியில் தரையிறங்கிய வீரர்களை மீட்புப்படை வீரர்கள் மீட்டு வருவார்கள் எனவும் நாசா தனது டிவிட்டர் X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின், விண்வெளி வீரர்கள் ஸ்டீபன் போவன், மற்றும் வாரன் வூடி ஹோபர்க், ரஷ்யாவின் ஆண்ட்ரி ஃபெட்யாவ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுல்தான் அல்-நேயாடி ஆகியோர் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர்.
அங்குத் தங்கி இருந்து ஆறு மாதங்களாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர்கள் இன்று(செப். 4) அதிகாலை 12.17 மணி அளவில் விண்கல கேப்சியூல் மூலம் அட்லாண்டிக் கடற்பகுதியில் தரையிறங்கி உள்ளனர். அவர்களை அங்கிருந்து மீட்க ஏற்கனவே நடவடிக்கைகள் திட்டமிடப்பட்ட நிலையில் மீட்புப்படை வீரர்கள் கடல் பகுதியில் இருந்து அவர்களை மீட்டு வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நாசா, விண்வெளி ஆராய்ச்சி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் "வெல்கம் ஹோம்" என அதில் பதிவிட்டு அவர்களை வரவேற்றுள்ளது. மேலும், காலநிலை மிக மோசமாக இருந்த காரணத்தால் அவர்கள் தரையிறங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் தரையிறங்கியதும் அந்த குழுவின் கமாண்டர் ஸ்டீபன் போவன், ஸ்பேஸ் நிறுவனத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு வாய்ப்பை வழங்கி தங்களுக்கு முழு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார். மேலும், இது நம்ப முடியாத ஒரு அனுபவம் எனத் தெரிவித்துள்ள அவர் பாராட்டுக்குரிய விஷயம் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், ஆறு மாத கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவு தரையிறங்குவதற்கு 17 மணி நேரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும் உணர்வுப் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நேற்று (செப் 3) காலை 7.05 மணி அளவில் விண்வெளி மையத்தில் இருந்து வெளியேறி அங்கிருந்து பூமியின் சுற்று வட்டப்பாதையை நோக்கி எங்கள் குழு பயணிக்க ஆரம்பித்தது எனவும் அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 12.17 மணி அளவில் பூமியை வந்தடைந்தோம் எனவும் தனது பயணம் குறித்து விளக்கியுள்ளார் குழுவின் கமாண்டர் ஸ்டீபன் போவன்.
இதையும் படிங்க:Solar exploration: இதுவரை சூரிய ஆய்வு - பட்டியலில் இருப்பது எந்தெந்த நாடுகள்.!