லண்டன்:பிரிட்டனைச் சேர்ந்த 'ஒன்போல்' (OnePoll) என்ற ஆராய்ச்சி நிறுவனம், 'த்ரீ யுகே' (Three UK) என்ற செல்போன் நிறுவனத்துடன் இணைந்து, குழந்தை வளர்ப்பில் ஸ்மார்ட்போன்களின் பங்கு தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்த ஆய்வில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். மொத்தம் ஆயிரம் பெற்றோர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. இவர்களிடம், குழந்தை வளர்ப்பில் ஸ்மார்ட் போன்களை எப்படி பயன்படுத்துகிறார்கள்? அவர்களது வாழ்க்கையில் ஸ்மார்ட் போன்களின் பங்கு என்ன? உள்ளிட்டவைகள் தொடர்பாக தரவுகள் சேகரிக்கப்பட்டன.
அந்த தரவுகளின்படி, ஆய்வில் பங்கேற்ற சுமார் 61 சதவீதம் பேர், ஸ்மார்ட்ஃபோன்கள் தான் குழந்தை வளர்ப்பில் மிகவும் உதவிகரமான சாதனம் என தெரிவித்து உள்ளனர். 77 சதவீதம் பேர், குழந்தை வளர்ப்பு தொடர்பாக ஆலோசனைகளைப் பெற, வாரத்திற்கு 77 முறை தங்களது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதாக தெரிவித்தனர். மேலும், குழந்தைகளின் தாய்மார்களும், தந்தைகளும் தங்கள் குழந்தைகளுக்காக ஷாப்பிங் செய்ய ஸ்மார்ட்போன்களை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதேபோல், ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாட்டால் டேட்டா நுகர்வும் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது. சுமார் 34 சதவீத பெற்றோர்கள், அதிக அளவு செல்போன் பயன்பாடு காரணமாக தாங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் டேட்டா அளவை விட கூடுதலாக பயன்படுத்த வேண்டி இருப்பதாக தெரிவித்து உள்ளனர். அதன்படி, பெற்றோர்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக ஐந்து ஜிகாபைட் டேட்டாவை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டு செயலிகள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வது, டேட்டா பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.