புளோரிடா:அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு குறித்து செய்தி சேகரிக்கச்சென்றபோது இரண்டாவது முறையாக மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 வயது சிறுமி, செய்தியாளர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரியவராத நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்லாண்டோ நகரில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து தனியார் செய்தி நிறுவன செய்தியாளர் உள்பட இருவர் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் செய்தி நிறுவன ஊழியர்கள் இருவர், 9 வயது சிறுமி, அவரது தாயார் படுகாயம் அடைந்தனர்.
4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 9 வயது சிறுமி மற்றும் செய்தியாளர் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிறுமியின் தாய் மற்றும் மற்றொரு செய்தி நிறுவன ஊழியர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.