இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமாக கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் இதுவரை, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது. நேற்று(செப்.3) ஒரேநாளில் 57 பேர் உயிரிழந்தனர். 12,577 பேர் காயமடைந்துள்ளனர். பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் உள்ள நிவாரண முகாம்களில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதில் 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதும் பாதிப்புகள் அதிகளவு இருப்பதால், நிலைமையை கையாள முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. அமெரிக்காவில் கடந்த 2005ஆம் ஆண்டு தாக்கிய கட்ரீனா புயலைப் போன்ற மிகப்பெரிய பாதிப்பை இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.