டெக்சாஸ் :தொந்தரவு செய்யும் வகையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருந்ததாக இளைஞரை தட்டிக் கேட்ட குற்றத்திற்கு அமெரிக்கா கிளீவ்லேண்ட் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை, பெண்கள் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் தலைவிரித்து ஆடுகிறது. பொது வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அதனால் பல உயிர்கள் அநாவசியமாக கொல்லப்படுவதும் அமெரிக்காவில் சகஜமான ஒன்றாக காணப்படுகிறது. துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் துப்பாக்கிச் சூடு வன்முறைகளை கட்டுப்படுத்த மாகாண அரசு சட்டம் இயற்றி உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் அண்டை வீட்டில் குடியிருந்த பெண்கள், குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தலைமைறவான நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனது வீட்டில் நின்று கொண்டு இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி தொடர்ச்சியாக சுட்டுக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளனர்.