வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள யுசிஎல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் தூங்கும் நேரத்திற்கும், உடலின் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் அறிக்கை பிஎல்ஓஎஸ் (PLOS) மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக 50, 60 மற்றும் 70 வயதுடைய ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ தரவுகளை பகுப்பாய்வு செய்தனர். ஒவ்வொருவரும் சராசரியாக எவ்வளவு நேரம் தூங்கினர், அவர்களுக்கு இருந்த நோய்கள், இறப்புக்கான காரணம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
ஐந்து மணி நேரம் மற்றும் அதற்கு குறைவாக தூங்கியவர்களின் தரவுகளை 7 மணி நேரம் வரை தூங்கியவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். 50 வயதில் ஐந்து மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் தூங்கியவர்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் 20 சதவீதம் அதிகம் என்றும், அவர்களுக்கு 25 ஆண்டுகளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.
50, 60 மற்றும் 70 வயதில் ஐந்து மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் தூங்கியவர்களுக்கு, 7 மணி நேரம் தூங்கியவர்களைவிட இறப்பு அபாயம் 25 சதவீதம் அதிகம் என தெரியவந்துள்ளது. குறைவாக தூக்கம் என்பது நீரிழிவு நோய், கேன்சர், இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தையும், இறப்பு ஏற்படுவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர் டாக்டர் செவெரின் சபியா கூறுகையில், "அதிக வருமானம் கொண்ட நாடுகளில் மல்டிமார்பிடிட்டி அதிகரித்து வருகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு இப்போது குறைந்தது இரண்டு நாள்பட்ட நோய்கள் உள்ளன. இது பொது சுகாதாரத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் மல்டிமார்பிடிட்டி எனப்படும் பல்நோய் பாதிப்புகள் ஏற்படுவோருக்கு உயர் சுகாதார சேவை தேவைப்படுகிறது. இது நோயாளிகளின் வருவாய் உள்ளிட்ட பல காரணிகளுடன் தொடர்புடையது.