நியூயார்க்: பேக்கர்ஸ்ஃபீல்டை சேர்ந்த மருத்துவர் ஜஸ்மீத் கவுர் பெயின்ஸ் கலிபோர்னியா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி சீக்கிய பெண் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
இந்தியாவில் இருந்து கலிபோர்னியாவிற்கு குடியேறிய ஜஸ்மீத் கவுரின் தந்தை, ஒரு ஆட்டோ மெக்கானிக்காகத் தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது கார்களை விற்பனை செய்யும் தொழிலை வெற்றிகரமாக கவனித்து வருகிறார். கல்லூரிக்குப் பிறகு, மருத்துவத் தொழிலைத் தொடரும் முன் ஜஸ்மீத் தனது தந்தையுடன் பணிபுரிந்தார்.
பின்னர், ஜஸ்மீத் கவுர் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ’Bakersfield Recovery Services’ எனும் மருத்துவமனையில் மருத்துவ இயக்குநராக பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று காலகட்டத்தில், ஜஸ்மீத் கவுர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனை தளங்களை நிறுவி மக்களுக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றினார்.