காபுல்:ஆப்கன் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஹெராத் நகரில் உள்ள குசர்கா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை இன்று (செப். 2) மதியம் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த வாரம், இஸ்லாமியர்கள் அங்கு சிறப்புத்தொழுகை மேற்கொண்டு வந்ததால், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில், தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 18 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஹெராத் நகரின் அவசர உதவி மையத்தைச் சேர்ந்த அலுவலர், முகமது தாவூத் முகமதி தெரிவித்துள்ளார். மேலும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தாலிபன் அலுவலர்கள் உறுதிப்படுத்திய நிலையில், உயிரிழப்புகள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. இதற்கு முன்னர், ஆப்கனில் தாலிபன்களை குறிவைத்து பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று வந்தன.